தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள்-மீனவர்கள் ஆர்ப்பாட்டம் வங்கி கடனை ரத்து செய்ய கோரிக்கை


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள்-மீனவர்கள் ஆர்ப்பாட்டம் வங்கி கடனை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 7:48 PM GMT)

வங்கி கடனை ரத்து செய்ய கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள்-மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், கஜா புயல் பாதித்த பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நுண்கடன் நிதி நிறுவனத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மீனவ பெண்கள் கடன் பெற்று அந்த கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர். தற்போது கஜா புயல் பாதிப்பால் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.

எனவே அவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நுண்கடன் நிதி நிறுவனத்தினர் பெண்களையும், மகளிர் சுயஉதவிக்குழுவினரையும் மிரட்டி அடாவடியாக வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். புயலால் வேலைவாய்ப்பு, வருமானம், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து பணம் கட்ட முடியாமல் இருக்கும் பெண்களை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வழங்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறப்பினர் சுரேஷ்குமார், பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கோவிந்தசாமி, மாதர் சங்க நிர்வாகிகள் வசந்தி, இந்துமதி, கலாவதி, லட்சுமி மற்றும் பெண்கள் பலர், அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விடுபட்ட அனைவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் மீனவர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

சேதம் அடைந்த நாட்டு படகுகள், விசைப்படகுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நிவாரண தொகையை மீனவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். வங்கிகளில் மீனவர்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். சுனாமி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அரசின் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மீனவ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பெரியண்ணன், நாகேந்திரன், செந்தில்குமார், பசுபதி, ராமானுஜம், சுதாகர் மற்றும் பலர், அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story