அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:43 PM GMT)

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இந்த நிலையில் அரியலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கல்யாணி. இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காசிநாதன் மற்றும் அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோர் தனக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அபகரிக்க பார்ப்பதாகவும், வீட்டை சேதப்படுத்தியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை கல்யாணி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், பொதுமக்கள் கொண்டு வரும் பை உள்ளிட்டவற்றை முழுமையாக சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே அனுப்புகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள மேலூர், செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 1992-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அரசு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.13லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய வழிகாட்டு மதிப்பை விட 2 மடங்கு உயத்தி வழங்குவது குறித்து, நிலம் கொடுத்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில் ஒரே திட்டத்துக்காக நிலங்கள் கொடுத்தவர்களுக்கு, வழிகாட்டு மதிப்பை கொண்டு இழப்பீடு வழங்கப்படும் போது, கிராமத்துக்கு கிராமம் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எனவே நிலம் கொடுத்த அனைவருக்கும் அப்போது அரசு கொடுத்த இழப்பீட்டு தொகையை விட 25 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 550 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story