மாவட்ட செய்திகள்

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு + "||" + Congress ministers of Rajasthan, Madhya Pradesh and Chhattisgarh have taken oath - Kamalnath's first order to cancel agricultural loan in MP

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர். மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றதும் விவசாய கடனை ரத்துசெய்து முதல் உத்தரவு பிறப்பித்தார்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

இதில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன.


சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில், பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தானில் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தளம் உறுப்பினர் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இதேபோல் மத்தியபிரதேசத்திலும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தீர்மானித்தது.

3 மாநிலங்களிலும் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைக்கு பின் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத்தும், சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

3 மாநிலங்களிலும் நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் பதவி ஏற்கும் விழா, ஜெய்ப்பூரில் உள்ள சரித்திர புகழ்பெற்ற ஆல்பர்ட் நினைவு அருங்காட்சியக மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் ராஜஸ்தானின் புதிய முதல்-மந்திரியாக 67 வயதான அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கல்யாண் சிங் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக 41 வயதான சச்சின் பைலட் பதவி ஏற்றார். வேறு மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் பதவி ஏற்பது இது 3-வது முறை ஆகும்.

பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடா, ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயும் விழாவில் கலந்து கொண்டார்.

முன்னதாக பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர் வந்து சேர்ந்த ராகுல்காந்தி, மன்மோகன் சிங், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் விமானநிலையத்தில் வரவேற்றனர். பின்னர் தலைவர்கள் விழா நடைபெறும் மண்டபத்துக்கு பஸ்சில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 72 வயதான கமல்நாத் பதவி ஏற்கும் விழா, போபால் நகரில் நடைபெற்றது. அவருக்கு கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை. கமல்நாத் மத்தியபிரதேசத்தின் 18-வது முதல்-மந்திரி ஆவார்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, மன்மோகன் சிங், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் கமல்நாத் பதவி ஏற்பு விழாவிலும் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, முன்னாள் பாரதீய ஜனதா முதல்-மந்திரிகள் சிவராஜ் சிங் சவுகான், கைலாஷ் ஜோஷி, பாபுலால் கவுர் ஆகியோரும் விழாவில் பங்கு கொண்டனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன்படி, நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலாக, விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கி இருக்கும் ரூ.2 லட்சம் வரையிலான குறுகியகால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூகேஷ் பாகேல் பதவி ஏற்கும் விழா ராய்ப்பூர் நகரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. புயல் காரணமாக மழை பெய்ததால் பதவி ஏற்பு விழா பல்பீர் ஜூனேஜா உள்விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டது. அங்கு நேற்று மாலை நடைபெற்ற விழாவில், முதல்-மந்திரியாக 57 வயதான பூபேஷ் பாகேல் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு, சத்தீஷ்கார் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் மத்தியபிரதேச கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

பூபேஷ் பாகேலுடன் தம்ரத்வாஜ் சாகு, டி.எஸ்.சிங் தியோ ஆகிய இரு மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

இந்த விழாவில் ராகுல்காந்தி, மன்மோகன் சிங், நாராயணசாமி, அசோக் கெலாட், சச்சின் பைலட், சரத்யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு
வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. 1952-ல் இருந்து ஒரே ஒரு இஸ்லாமிய எம்.பி.யை மட்டும் டெல்லிக்கு அனுப்பிய மாநிலம்
ராஜஸ்தான் மாநிலம் 1952-ல் இருந்து ஒரே ஒரு இஸ்லாமிய எம்.பி.யை மட்டும் டெல்லிக்கு அனுப்பியுள்ளது.
3. ராஜஸ்தான்: விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு
ராஜஸ்தான் மாநிலம் நல் பைகானீர் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
4. ராஜஸ்தானில் முதல்-மந்திரி மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு
ராஜஸ்தானில் முதல்-மந்திரி மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5. ராஜஸ்தானில் ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் உடைகள் சேகரிப்பு - அரச பரம்பரையை சேர்ந்தவரின் கின்னஸ் சாதனை
ராஜஸ்தானில் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவர், ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் உடைகள் சேகரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.