சேலம் செவ்வாய்பேட்டையில் பரபரப்பு: வெல்லம் உற்பத்தியாளர்கள்- கரும்பு விவசாயிகள் மோதல் - போலீசார் குவிப்பு


சேலம் செவ்வாய்பேட்டையில் பரபரப்பு: வெல்லம் உற்பத்தியாளர்கள்- கரும்பு விவசாயிகள் மோதல் - போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 5:00 AM IST (Updated: 18 Dec 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் வெல்லம் உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் அருகே வெல்ல மண்டி உள்ளது. இந்த மண்டிக்கு ஓமலூர், காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் வெல்லத்தை கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மண்டியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வெல்லத்தை திரும்ப ஒப்படைக்க கோரி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையில் போராட்டத்துக்கு பின்னர் நேற்று காலை வெல்ல மண்டி திறக்கப்பட்டது. இதனால் வெல்லம் உற்பத்தியாளர்கள் வெல்லத்தை ஏலம் விடுவதற்காக வாகனங்களில் கொண்டு வந்தனர்.

இதனிடையே நேற்று காலை சேலம் மாவட்ட கரும்பு மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க மகாசபை கூட்டம் மண்டியில் நடந்தது. இதில் வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கரும்பு விவசாயிகள் பேசும்போது, ‘கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டதால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வெல்லத்தை பறிமுதல் செய்கின்றனர். இவ்வாறு வெல்லத்தில் சர்க்கரை கலந்து கலப்படமாக உற்பத்தி செய்வதால் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே வெல்ல உற்பத்தியாளர்கள் கலப்படம் செய்யக்கூடாது’ என்று பேசினர்.

இதற்கு வெல்லம் உற்பத்தியாளர்கள் பதில் கூறும்போது, ‘நீங்கள்தான் தரம் இல்லாத கரும்புகளை தருகிறீர்கள், நாங்கள் வெல்லத்தில் கலப்படம் செய்யவில்லை’ என்று தெரிவித்தனர்.

இதனால் வெல்ல உற்பத்தியாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வெல்லத்தை ஏலம் செய்ய விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு பதற்றம் நிலவியதால் அதிவிரைவு படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இருதரப்பை சேர்ந்தவர்களும், ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றம் சாட்டினர். இதையடுத்து இருதரப்பை சேர்ந்தவர்களும் புகார் கொடுப்பதற்காக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதில் இருந்து 100 டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெல்லத்தில் சர்க்கரை உள்ளிட்டவை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் டன் ரூ.2,500-க்கு விற்கப்பட்ட கரும்பு தற்போது ரூ.1,500-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம் ரூ.1,000 வரை நஷ்டம் ஏற்படுவதால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே வெல்லத்தில் கலப்படம் செய்யக்கூடாது என்று வெல்லம் உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்கிடையில் வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர், விவசாயி ஒருவருடைய ‘வாட்ஸ் அப்’ எண்ணுக்கு தவறான வார்த்தையை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெல்லம் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரமேஷ்குமார் கூறும்போது, ‘சர்க்கரையை கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும் காலங்களில் சர்க்கரையை கலக்காமல் வெல்லம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story