கும்மிடிப்பூண்டி அருகே பட்டாசு வெடித்து சிதறி 2 பேர் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அருகே ஊதுவர்த்தி நெருப்பு பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் வசித்து வருபவர் அல்லாபகஷ்(வயது 54). இவர், தனது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள தனி இடத்தில் சொந்தமாக பட்டாசு உற்பத்தி செய்து வருகிறார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நாட்டு வெடி உள்பட இதர பட்டாசுகளை அவர் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வினியோகம் செய்து வருகிறார்.
மேலும் அல்லாபகஷ், தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள தனி அறையில் தன்னை தேடிவரும் பலதரப்பட்ட மக்களுக்கு மந்திரிப்பது, மாந்தீரிகம் செய்வது, தாயத்து கட்டுவது உள்பட பல்வேறு வேலைகளையும் செய்து வருகிறார்.
பட்டாசுகள் வெடித்து சிதறியது
நேற்று இரவு வீட்டின் முன்பகுதியில் உள்ள தனி அறையில் அல்லாபகஷ் மற்றும் ஆம்பூரில் இருந்து வந்த அவரது உறவினர் காலிக்(39) ஆகியோர் மட்டும் இருந்தனர். அந்த அறையில் நாட்டு வெடிகள் உள்பட ஏராளமான பட்டாசுகள் ஒரு பையில் இருந்தன.
வழிபாட்டுக்காக அல்லாபகஷ், அந்த அறையில் ஊதுவர்த்தியை கொளுத்தினார். அப்போது ஊதுவர்த்தியின் நெருப்பு தவறுதலாக பட்டாசுகள் இருந்த பையில் விழுந்தது. இதனால் அந்த அறையில் இருந்த நாட்டு வெடிகள் உள்ளிட்ட பட்டாசுகள் கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் வெடித்து சிதறியது. இதில் அறையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது.
2 பேர் படுகாயம்
இதில் அந்த அறையில் இருந்த அல்லாபகஷ், காலிக் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story