பட்டாசு ஆலைகளை திறக்க கோரி சிவகாசியில் 21-ந்தேதி கடையடைப்பு


பட்டாசு ஆலைகளை திறக்க கோரி சிவகாசியில் 21-ந்தேதி கடையடைப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 5:14 AM IST (Updated: 18 Dec 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி சிவகாசியில் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி

சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு உற்பத்திக்கு விதித்த நிபந்தனைகளை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 13-ந்தேதி முதல் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளன.

இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அந்த தொழிலில் ஈடுபட்டு வந்த பலர், வெளியூர்களுக்கு வேறு வேலைதேடி சென்று விட்டனர். சிலர் காலண்டர் மற்றும் நோட்டு புத்தகம் தயாரிக்கும் அச்சகங்களில் கூலி வேலைக்கு சேர்ந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள டான்பாமா திருமண மண்டபத்தில் நேற்று காலையில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், தேவா, சமுத்திரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள், லாரி உரிமையாளர்கள், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி வருகிற 21-ந்தேதி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அன்று சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைத்து நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு அழைப்பு விடுப்பது.

21-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் பட்டாசு தொடர்புடைய தொழில் செய்பவர்கள் மட்டும் அல்லாமல் தீப்பெட்டி மற்றும் அச்சு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் தேவா தெரிவித்தார்.

Next Story