கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்


கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:44 PM GMT (Updated: 17 Dec 2018 11:44 PM GMT)

ராமநாதபுரத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் சட்ட விதிகளை மீறி விசைப்படகுகள் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்கக்கோரியும், மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மீனவர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட பொருளாளர் சந்தானம், மாவட்ட துணை செயலாளர் பச்சமால், மாவட்ட தலைவர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அப்போது பாலபாரதி கூறியதாவது:- மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் கடல்வளத்தை தூக்கி கொடுத்து மீனவர்களுக்கு அரசு துரோகம் செய்துள்ளது. தமிழகத்தில் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முறையாக சென்றடையவில்லை. கடல்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக பெரிய நிறுவனங்கள் இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர்.

இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை. விசைப்படகுகள் கடலோர பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்களின் தொழில்வளத்தை பாதிக்கிறது.

இதனை கண்காணித்து தடுக்க வேண்டிய மீன்வளத்துறை செயல்படாமல் உள்ளதால் நாட்டுப்படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தினை மீண்டும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, ஜேம்ஸ்ஜஸ்டின், முத்துவேல், அகமது ஜலால், மலைச்சாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்களும், மீனவ பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இவர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story