கடலோர காவல் படை கப்பலில் சென்று ராமேசுவரம் கடல் பகுதியை எல்லை பாதுகாப்பு படை தலைவர் ஆய்வு
கடலோர காவல் படை கப்பலில் சென்று, ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதியை எல்லை பாதுகாப்பு படை தலைவர் ரஜினிகாந்த் மிஸ்ரா திடீர் ஆய்வு செய்தார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதியை ஆய்வு செய்வதற்காக எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் ரஜினிகாந்த் மிஸ்ரா நேற்று வந்திருந்தார்.
இதற்காக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்துக்கு வந்திருந்த அவர், தரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய ‘ஹோவர்கிராப்ட்‘ என்ற கடலோர காவல் படை கப்பலின் மூலம் சென்று, மன்னார் வளைகுடா கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்தார்.
பின்னர் தனுஷ்கோடி கடல் பகுதியிலும் ஆய்வு செய்தார். அந்த கப்பல் மூலமாகவே இந்திய எல்லை முடிவடையும் 5–வது மணல் திட்டு வரை சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது இந்திய கடல் எல்லையின் வரைபடத்தை வைத்து, அவரிடம் கப்பல் கமாண்டர் ஆங்கூர் விளக்கி கூறினார். ஆய்வு நடந்து கொண்டிருந்த போது, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தனுஷ்கோடி பகுதியில் தாழ்வாக பறந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
ஆய்வை தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை தலைவர் ரஜினிகாந்த் மிஸ்ரா, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கப்பலில் இருந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன், பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு சென்றும் மரியாதை செலுத்தினார்.
எல்லை பாதுகாப்பு படை தலைவர், ராமேசுவரம் கடலில் இந்திய எல்லை வரை கப்பலில் சென்று ஆய்வு செய்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி அமைந்துள்ளது. தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் மத்திய நெடுஞ்சாலைதுறை மூலம் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து 1½ வருடமாகிறது.
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் 2 கடல்கள் சங்கமிக்கும் அரிச்சல்முனைக்கு சென்று ரசிப்பதுடன், கம்பிப்பாடு பகுதியில் உள்ள புயலால் அழிந்து போன கட்டிடங்களையும் பார்த்துவிட்டு திரும்புவர். மேலும் மீன்பிடி தொழிலை நம்பி தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், எம்.ஆர்.சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 200–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மத்திய அரசு சார்பில் ரூ.2¾ கோடியில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு தேர்வு செய்த இடத்தை சென்னை கலங்கரை விளக்க உதவி பொறியாளர் சகாதேவன், அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் வெங்கட்ராமன், சிங்காரவேலு, இந்திரஜித் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று நவீன ஜி.பி.எஸ். கருவி மூலம் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் ஒலைக்குடா, பாம்பன், கீழக்கரை, தொண்டி அருகே பாசிப்பட்டினம் ஆகிய 4 இடங்களில் மட்டும்தான் கலங்கரை விளக்கம் உள்ளது. தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் புதிதாக கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு மத்தியஅரசு ஒப்புதல் தந்து உள்ளது. கலங்கரை விளக்கம் கட்டுவதற்கான பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கி, 1 ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது“ என்றார்.