பூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பூர்வீக ஆயக்கட்டு பகுதிகளுக்கு வைகை தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மதுரை,
சிவகங்கை மாவட்ட வைகை பாசன சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பெரியாறு மற்றும் வைகை அணைகள் நிரம்பிய நிலையில் பூர்வீக ஆயக்கட்டு 2–வது மற்றும் 3–வது பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன்மூலம் எங்களது பூர்வீக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. எங்களது பங்கீடு நீர் அணையில் இருந்தும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் நெல் சாகுபடியை தொடங்க முடியவில்லை.
இதற்கிடையில் கடந்த மாதம் 23–ந்தேதி முதல் 27–ந் தேதி வரை 4 நாட்களுக்கு 631 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 2–வது பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வந்தது. இதனால் நெல் சாகுபடி பணிகளை தொடங்கினோம். நடவு செய்த இந்த பயிர்களை காக்க 80 நாட்களுக்கு நீர் தேவைப்படுகிறது.
வைகை அணை மற்றும் பெரியாறு அணையில் போதிய நீர் உள்ளது. எனவே வைகை ஆற்றின் பூர்வீக ஆயக்கட்டு 2–வது பகுதியான மதுரை, சிவகங்கையில் உள்ள 87 கண்மாய்களுக்கு நீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் பயிரிடப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.