விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 2–வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு,
ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
மின்சாரத்தை கொண்டு செல்ல விவசாய விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக சாலையோரங்கள் வழியாக புதை வட கேபிள்கள் புதைத்து மின்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், ஏற்கனவே உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடும், மின்பாதை அமைந்து உள்ள இடங்களுக்கு ஆண்டு வாடகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே உயர் அழுத்த மின்கோபுரங்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வரும் நிலையில், உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 8 இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 15–க்கும் மேற்பட்டவர்கள் போராட்ட பந்தலிலேயே தங்கி இருந்தனர். அதைத்தொடர்ந்து 2–வது நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் நேற்றும் போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், பவானி நதிநீர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பொறியாளர் ராமசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே.சண்முகம், செயலாளர் சந்திரசேகர், ஆகியோர் போராட்ட கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
போராட்டத்தை சி.எம்.துளசிமணி, சென்னிமலை பொன்னுசாமி, வி.பி.குணசேகரன், பவானி கவின் உள்ளிட்ட கூட்டு இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். நேற்றும் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவு கலந்து கொண்டனர்.
போராட்டம் மாலைவரை தொடர்ந்து நடந்தது. இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடரும், விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள், உயர்அழுத்த மின்கோபுரம் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று போராட்டக்குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.