கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் கடத்திய 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது


கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் கடத்திய 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 3:04 PM GMT)

கன்னியாகுமரி அருகே சொகுசு காரில் கடத்திய 1½ டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில்  இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். கடந்த 16–ந் தேதி நள்ளிரவு மினி டெம்போவில் கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் தேங்காப்பட்டணத்தில் வைத்து பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த விவரம் வருமாறு:–

மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில், சிறு, சிறு மூடைகளில் 1½ டன் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து காரில்  இருந்த கேரளாவை சேர்ந்த டிரைவர் அஜித் குமார் (வயது 45), கன்னியாகுமரியை சேர்ந்த ராஜபாண்டியன் (55), அசோகன் (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சொகுசு காரில் கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சொகுசு காருடன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அத்துடன் அதை கடத்த முயன்ற அஜித்குமார், ராஜபாண்டியன், அசோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி நாகர்கோவிலில் உள்ள அரசு குடோனில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story