ஆண்டிப்பட்டி அருகே மலையில் இருந்த சிலுவையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - கிராம மக்கள் சாலை மறியல்


ஆண்டிப்பட்டி அருகே மலையில் இருந்த சிலுவையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் - கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே மலையில் இருந்த சிலுவையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டி கிராமத்தில் ஒரு சமூகத்தினர் அதே பகுதியில் உள்ள மலையில் சிலுவை அமைத்துள்ளனர். அங்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மலையில் இருந்த சிலுவையை நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதனை காலையில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிலுவை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே காட்டுத்தீயை போல பரவியது. பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் மணியக்காரன்பட்டி-ஆண்டிப்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலுவையை சேதப்படுத்திய மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story