தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 166 பேருக்கு நோட்டீஸ் - பொதுப்பணித்துறையினர் தகவல்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக 166 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி,
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றில் தொடங்கி தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளத்தில் ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கண்மாய் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
விவசாயத்துக்கும், நிலத்தடி நீர் உயர்வுக்கும் ஆதாரமாக இருந்த இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. வாய்க்கால் கரையோர பகுதியை ஆக்கிரமிப்பு செய்தபோதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதனால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து மக்கள் வீடுகட்டியும், வணிக நிறுவனங்கள் அமைத்தும் வந்தனர்.
அதேபோல், விளை நிலங்களும் வீட்டு மனைகளாக மாறின. விவசாயம் செய்த நிலங்களில் தற்போது அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாய்க்கால் கழிவுநீர் ஓடைபோல் மாறியது. அதிலும் தண்ணீர் செல்வதற்கு வழியின்றி மண் நிரம்பி காணப்பட்டது. இதனால் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்அடிப்படையில் வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் அடையாள குறியீடு வரையப்பட்டன. அந்த வகையில் 166 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் வாய்க்காலை முழுமையாக தூர்வார முடியும் என்ற நிலைமை உள்ளது. அதன்படி 166 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்பாளர்கள் விவரங்கள் கேட்ட போது அவர்கள் பெயர் விவரங்கள் மட்டுமே கொடுத்தனர். இதனால், முழுமையான முகவரி கேட்டுப் பெற்றுள்ளோம். அதன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாத நிலையில், அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
Related Tags :
Next Story