கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி,
தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதியில் இருந்தே பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மதுக்கண்ணன், தேனி வட்டக்கிளை தலைவர் மகேஸ்வரி, செயலாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். அதில் முக்கியமாக, 50 சதவீதம் கிராம நிர்வாக அலுவலர்கள் பெண்களாக உள்ளனர். எனவே கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண் அலுவலர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிய சொந்த மாவட்டங்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். இ-சேவைகளை வழங்க அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் செலவினத் தொகை வழங்க வேண்டும். இ-சேவை முறையில் வருவாய்த்துறை சான்றுகள் மற்றும் இ-அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்களே வழங்குமாறு எளிமைப்படுத்தி பொதுமக்களின் அலைச்சலை குறைக்க அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர் களுக்கும் பொதுவான பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற உதவி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story