மேகதாது அணை கட்ட அனுமதி: மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், விவசாயிகள் ஊர்வலம்


மேகதாது அணை கட்ட அனுமதி: மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 5:46 PM GMT)

மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும், மேகதாது அணை செயலாக்க திட்டம் தயாரிக்க கர்நாடகத்திற்கு கொடுத்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சையில் நேற்று விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்துக்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார்.

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. பின்னர் அங்கு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி குகன்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி ஜெயினுல்லாபுதீன், சமவெளி விவசாயிகள் இயக்க நிர்வாகி பழனிராசன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் வந்த சிலர் கருப்புக் கொடிகளை ஏந்தி வந்தனர்.


முன்னதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராகவும், காவிரி ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செயலாக்க திட்டம் தயாரிக்கவே கர்நாடகத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தமிழக எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் மேகதாது உள்ளது. ஏற்கனவே 67 டி.எம்.சி. கொள்ளளவு பரப்பில் அணை கட்ட செயலாக்க திட்டத்தை தயாராக வைத்து இருக்கிறது. யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்களை நயவஞ்சகமாக ஏமாற்றுகிறீர்கள்.


சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மீறி இனப்பாகுபாடுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. கர்நாடகத்துடன் சேர்ந்து கொண்டு தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. எனவே அணை கட்ட கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்து இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி காப்பு நாள் என அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பலன் இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை 1 வாரம் முற்றுகையிட்டு அலுவலகங்களை செயல்படாமல் முடக்கும் போராட்டத்தை ஆளும் கட்சியே எதிர்க்கட்சிகள், மக்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story