கோவை அருகே, அட்டகாசம் செய்த விநாயகன் யானை பிடிபட்டது - சின்னதம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்


கோவை அருகே, அட்டகாசம் செய்த விநாயகன் யானை பிடிபட்டது - சின்னதம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 19 Dec 2018 5:00 AM IST (Updated: 18 Dec 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விநாயகன் பிடிபட்டது. தொடர்ந்து சின்னதம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கோவை,

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கணுவாய், சின்ன தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதியை ஒட்டிய காடுகளில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டு உள்ளது.

இருந்தாலும் ஆழம் குறைந்த அகழி வழியாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தன.

வனப்பகுதிக்குள் விரட்ட எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அவற்றின் தொந்தரவு அதிகமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. இவற்றை அடிக்கடி பார்த்ததால் பொதுமக்கள் சின்னதம்பி, விநாயகன் என்று பெயர் சூட்டினார்கள். தொடர்ந்து இந்த 2 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்று மேலும் பல காட்டு யானைகளுடன் வெளியே வந்து பயிர்களை சேதப்படுத்தின. அத்துடன் பொதுமக்களையும் துரத்தின.

எனவே இந்த 2 யானைகளையும் பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கலெக்டரிடம் மனுவும் கொடுத்தனர். அந்த யானைகளை பிடிக்க வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஹரிகரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து யானைகளை பிடிக்க தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ரகுநாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து முதுமலையில் இருந்து வசீம், கொம்பன், விஜய், கோவையை அடுத்த சாடிவயலில் இருந்து சேரன் ஆகிய 4 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. அவைகள் வரப்பாளையம் அருகே உள்ள பொன்னூத்துமலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டன. இதை தொடர்ந்து காட்டு யானைகள் தங்கள் இடத்தை மாற்றி, பெரிய தடாகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்றன.

இதனால் 4 கும்கி யானைகளும் பெரிய தடாகத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே மலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டன. இருந்தபோதிலும் காட்டு யானைகள் வேறு வழியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

எனவே 2 காட்டு யானைகளையும் பிடிப்பதில் வனத்துறையினர் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சின்னதம்பி யானை கோவையை அடுத்த பன்னிமடைக்கும், குருடம்பாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முகாமிட்டது. எனவே அந்த யானையை குருடம்பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் அருகே விரட்டி வந்து அங்கு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு இந்த பணியை தொடங்கினார்கள். அங்கிருந்து அந்த யானையை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தபடி துரத்திக்கொண்டு இருந்தனர். ஆனால் சின்னதம்பி யானை அங்கிருந்து திசைமாறி பொன்னூத்துமலையை கடந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாங்கரை பகுதிக்கு சென்றது.

எனினும் வனத்துறையினர் தொடர்ந்து அந்த யானையை துரத்திக்கொண்டே வந்தனர். அப்போது மாங்கரை அருகே திடீரென்று அந்த யானை விலகி பாலமலையை நோக்கி சென்றுவிட்டது. அந்த நேரத்தில் விநாயகன் என்ற இன்னொரு யானை மாங்கரை பகுதியில் நின்றது. உடனே வனத்துறையினர் விநாயகன் யானையை பிடிக்க முடிவு செய்து அதை சமதள பகுதிக்கு துரத்திக்கொண்டு வந்தனர்.

அதிகாலை 4.30 மணியளவில் அந்த காட்டு யானை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலை கடந்து மலையடிவார பகுதியில் நின்றது. இதையடுத்து கால்நடைத்துறை மருத்துவர் மனோகரன் அங்கு விரைந்து வந்து அந்த யானைக்கு துப்பாக்கி மூலம் காலை 6 மணிக்கு மயக்க ஊசியை செலுத்தினார்.

சிறிது நேரத்தில் மயங்கிய அந்த காட்டு யானை அங்கேயே நின்றது. உடனே அந்த பகுதிக்கு கும்கி யானைகள் வசீம், விஜய், கொம்பன், சேரன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. அத்துடன் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா, மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், கோவை வனச்சரக அதிகாரி சுரேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அதுபோன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன், மற்றும் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், கலைவாணன் ஆகியோரும் அங்கு விரைந்தனர். அந்த காட்டு யானை மயக்கத்தில் இருந்ததால் அதன் 4 கால்களும் கயிறு மூலம் கட்டப்பட்டது. அத்துடன் கழுத்து பகுதியிலும் கயிற்றால் கட்டினார்கள்.

தொடர்ந்து அங்கு யானையை லாரியில் ஏற்றுவதற்கான வசதியும் செய்யப்பட்டு, லாரியும் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் கும்கி யானைகள் வசீம், விஜய் ஆகியவை அந்த காட்டு யானை அருகே சென்று லாரியில் ஏற்ற இடித்து தள்ளின. ஆனாலும் அந்த யானை லாரியில் ஏற மறுத்தது.

இதனால் பொக்லைன் எந்திரத்தில் கயிறு கட்டி அந்த யானையை இழுத்து லாரியில் ஏற்ற வைத்தனர். அப்போது பின்னால் இருந்து கும்கி யானை வசீம் அந்த காட்டு யானையை தந்தத்தால் குத்தியதால் அந்த யானை லாரியில் ஏறியது. உடனே லாரியில் இருந்து அந்த யானை வெளியே வந்து விடாமல் இருக்க கட்டைகள் வைத்து கட்டப்பட்டது. பின்னர் அந்த காட்டு யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்காக முதுமலை கொண்டு சென்றனர்.

தொடர்ந்து சின்னதம்பி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த யானை தற்போது எங்கு உள்ளது என்பது குறித்து கண்காணித்து வரும் வனத்துறையினர், அந்த யானையை இன்னும் ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றனர்.

காட்டு யானை விநாயகன் பிடிபட்டதை அறிந்த சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் அந்த யானையை வேடிக்கை பார்த்ததுடன், சிலர் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துக்கொண்டனர். 

Next Story