காரைக்குடி அருகே நள்ளிரவில் மணல் கடத்த முயன்ற கும்பல்; கிராம மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்


காரைக்குடி அருகே நள்ளிரவில் மணல் கடத்த முயன்ற கும்பல்; கிராம மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 6:56 PM GMT)

காரைக்குடி அருகே நள்ளிரவில் மணல் கடத்த முயன்ற கும்பல் கிராம மக்கள் திரண்டு வந்ததால் தப்பி ஓடினர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ளது ஆலத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ளது ஆலத்தி கண்மாய். சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்துள்ளவர்கள் தான். இந்தநிலையில் ஆலத்தி கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள மணலை நள்ளிரவில் ஒரு கும்பல் லாரிகள் மூலம் கடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த செயல் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வழக்கம் போல இந்த கண்மாயில் உள்ள வரத்துக்கால்வாயில் உள்ள மணலை ஒரு கும்பல் சுமார் 300 மூடைகளில் கடத்த முயன்றுள்ளனர்.

இதையறிந்த அந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் மணல் அள்ளும் கும்பல் மூடைகளை அங்கேயே போட்டு விட்டு லாரியை எடுத்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து கிராம மக்கள் குன்றக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆர்.எம்.கே பாரதி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது:– கடந்த சில மாதங்களாக இந்த கண்மாயில் உள்ள வரத்துக்கால்வாயில் உள்ள மணலை ஒரு கும்பல் நள்ளிரவு நேரத்தில் கடத்தி வருகின்றனர்.

இந்த கண்மாயை நம்பி 80 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள ஆத்தங்குடி, நெற்புகப்பட்டி, திருவேலங்குடி, அரண்மனைப்பட்டி ஆகிய பகுதியில் வரும் மழைநீர் இந்த வாய்க்கால் மூலம் கண்மாயிக்கு வந்து நிரம்பும்.

இந்தநிலையில் வரத்து கால்வாயில் மணல் திருடப்படுவதால், மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் வரத்து குறைந்து இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்மாய்க்கரை ஓரத்தில் மணல் கடத்தும் கும்பல் தனிப்பாதை உருவாக்கி அதில் லாரிகளில் சென்று மணல் கடத்தி வந்தனர். தற்போது அந்த பாதையை கிராம மக்கள் முள்வேலி கொண்டு அடைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு மூடைகளில் கடத்துவத தெரியவந்ததும், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து, மணல் திருட்டு கும்பலை பிடிக்க முயன்றோம். அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் வந்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் கடத்துவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது கிராம மக்கள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story