ஈரோட்டில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஊர்வலம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோட்டில் ஊர்வலம் சென்றனர்.
ஈரோடு,
கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இணையதள வசதி செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக கிராம நிர்வாக அதிகாரிகளின் பணிகள் முடங்கி கிடக்கின்றன. பொதுமக்கள் வருமானம், இருப்பிடம், பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகளின் ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மேற்கு மண்டல செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். ஈரோடு சம்பத்நகர் நால்ரோட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கொங்கு கலையரங்கத்தில் நிறைவடைந்தது.
இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடியும் நடந்து சென்றனர். இதில் மாவட்ட செயலாளர் முருகேஷ், வட்ட தலைவர் ஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரிகள் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும், வருகிற நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். அதன்படி நாளை (வியாழக்கிழமை) ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் ஒன்றிணைந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டமும், வருகிற 21–ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டமும் நடத்த உள்ளோம்.
வருகிற 24–ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்தும், 26–ந் தேதி எம்.பி.க்களை சந்தித்தும் கோரிக்கை மனு கொடுக்கிறோம். 27–ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் முழுநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.