குடிசைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு தாலுகா அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை
குடிசைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகையிட்டனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வடதில்லை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 26 பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 50 பேர் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.
அதன்பேரில் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை சேர்ந்த வருவாய் அதிகாரிகள் 2 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னர் வடதில்லை கிராமத்துக்கு சென்ற பழங்குடியினர் வசித்து வந்த குடிசைகளை அகற்ற சென்றனர்.
திடீர் என்று குடிசைகளை அகற்ற சொன்னால் எப்படி என்று பழங்குடியினர் கேள்வி கேட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் வடதில்லை கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் இருளர் சமுதாயம் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட தலைவர் முரளி முன்னிலையில் நேற்று மாலை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகை போராட்டத்திற்கு வக்கீல் வடதில்லைகுமார் தலைமை தாங்கினார்.
வக்கீல்கள் உதயா, வினோத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் பழங்குடியினர் தாசில்தார் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
Related Tags :
Next Story