திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:00 AM IST (Updated: 19 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் 27-வது வைணவ தலமான இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 8-ந் தேதி ஆழ்வாருக்கு, பெருமாள் மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பக்தவத்சல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற சரண கோஷங்களை எழுப்பி பெருமாளை வழிபட்டு சொர்க்கவாசலை கடந்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜா, மேலாளர் காளிமுத்து, அலுவலர் ராஜராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

அதேபோல் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவிலில் நேற்று அதிகாலை செர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் சொர்க்க வாசலில் சீதா, லெட்சுமணர் மற்றும் வேதாந்த மகாதேசிகருடன் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் தமிழ்மணி, செயல் அதிகாரி அய்யப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர். சொர்க்க வாசல் திறப்பை தொடர்ந்து நேற்று இரவு முதல் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் தொடங்கியது.

ஆலங்குடியில் உள்ள அபயவரதராஜ பெருமாள் கோவில், வடுவூர் கோதண்டராமசாமி கோவில், பேரளம் அருகே சிறுபுலியூரில் உள்ள கிருபாசமுத்திர பெருமாள் கோவில், மூங்கில்குடி வரதராஜபெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

Next Story