தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்; கலெக்டர் அறிவுரை


தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்; கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தொழில் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–

தமிழக அரசின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், புதிதாக கல்வி புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் தமிழகத்தில் உள்ள 88 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை எடுத்து சொல்வதற்கும், சுயமாக தொழில் துறையில் ஈடுபடுவதற்கும், தகுந்த வழிமுறைகளை கூறுவதற்கும் இந்த ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையில் சுய தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 15 ஆயிரம் மானியத்துடன் ரூ.25 லட்சம் வரையிலும், தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியத்துடன் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையும் சுய தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய திட்டங்களை பயன்படுத்தி இன்றைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் தொழில்துறையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி புதிய தொழில்முனைவோர்களாக உருவாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் அதிக அளவில் புதிய தொழில் தொடங்கும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். திருப்பூர் இன்று மிகப்பெரிய தொழில் நகராக உருவாகி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. அன்னிய செலாவணி மூலம் உலக அளவில் திருப்பூருக்கு தனி இடம் கிடைத்துள்ளது. இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏதாவது ஒரு தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசு அவர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்து அதற்கு தேவையான அனைத்து வகையான நிதிகளை வழங்க தயாராக உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த முகாமில் சிக்கண்ணா அரசு கல்லூரி முதல்வர் ராமையா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கந்தசாமி, தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் புஷ்பலதா, கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story