மடத்துக்குளத்தில் நெல்கொள்முதல் செய்யாததால் தாசில்தார் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா


மடத்துக்குளத்தில் நெல்கொள்முதல் செய்யாததால் தாசில்தார் அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யாததால் மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த பிறகு விவசாயிகள் நெல் மூடைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்கிறார்கள். பின்னர் தங்களது நெல் மூடைகளை எடை போட்டு, அரசு நிர்ணயம் செய்த தொகையை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். அவ்வாறு அரசு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதாரமாக, பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கான நெல்கொள்முதல் தொகை வழங்கப்படும்.

ஆனால் தற்போது சில கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் போராட்டம் காரணமாக, ஆய்வு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதால், விவசாயிகளின் நெல் மூடைகளை, அரசுகொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் கடந்த 18 நாட்களாக விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் ஒன்று திரண்டு நேற்று தாலுகா அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள், கிராம நிர்வாக அலுவலர் போராட்டம் முடியும் வரை எங்களது நெல்லை இருப்பு வைக்க முடியாது. எனவே இதற்கு மாற்று வழிசெய்ய கோரியும் விதிமுறைகளை தளர்த்தி நெல்லை உடனடியாக கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கும்படி, மடத்துக்குளம் தாசில்தாரிடம் முறையிட்டனர்.

அப்போது அவர் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. 2 நாட்கள் பொறுத்திருங்கள், பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கலாவதி கூறினார். இதை தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அரை மணிநேரம் கழித்து தாசில்தாரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அப்போது நீங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு வாணிப நுகர்வோர் கழகத்தின் மண்டல மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை முதல் (இன்று) விவசாயிகளின் சிட்டாவை மட்டும் பெற்றுக்கொண்டு, அரசு நெல் கொள்முதல் மையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார்.

அதன் பின்னர் அரசுநெல் கொள்முதல் மையத்தின், மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வருவதாக தகவல் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.


Next Story