ஐகோர்ட்டு உத்தரவுப்படி மெரினா கடற்கரையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மெரினா கடற்கரையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வசதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவை சுத்தப்படுத்துவது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆஜராகி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி செய்ய அறிவுரை வழங்கினார். இதையடுத்து நேற்று காலை மெரினா கடற்கரையில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மெரினா கடற்கரையில் நடைபெறும் தூய்மை மற்றும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கடுமையான நடவடிக்கை
இந்த ஆய்வின் போது மெரினா கடற்கரையில் உள்ள இலவச பொது கழிப்பிடம் சுகாதாரமாக உள்ளதா என்று பொது கழிப்பிடத்துக்கு உள்ளே சென்று ஆய்வு செய்தார். பின்னர் மெரினா கடற்கரை ‘லூப்’ சாலையில் உள்ள கட்டிடக்கழிவுகளை உடனே அகற்றவேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடைய 300 மீன் கடைகள் அமைக்கப்பட்டுவரும் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் மெரினா கடற்கரையை தூய்மையாக வைக்க தேவையான நடவடிக்கை உடனுக்குடன் வைக்க வேண்டும் என்றும், ஏதேனும் குறைபாடு இருப்பின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் கோவிந்தராவ், மதுசுதன் ரெட்டி, சுபோத்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story