முதல்–அமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்போம்; என்.ஆர்.காங்கிரஸ்–அ.தி.மு.க. அறிவிப்பு


முதல்–அமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்போம்; என்.ஆர்.காங்கிரஸ்–அ.தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 5:15 AM IST (Updated: 19 Dec 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் நாராயணசாமி கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்போம் என்று என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் அறிவித்துள்ளன.

புதுச்சேரி,

மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு உள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்–அமைச்சர் நாராயணசாமி இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சன்வே ஓட்டலில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்துகொள்ளாது என்று சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சார்பிலோ, முதல்–அமைச்சர் சார்பிலோ நேரடியாக வழக்கு தொடரவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வை சேர்ந்த பெண் ஒருவரும் வழக்கு போட்டனர். நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் இருக்க ஆக்கப்பூர்வமான எந்தவித தகவலையும் சமர்ப்பிக்காததால் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு வாக்குரிமை வழங்கியுள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட 12 எம்.பி.க்கள், தமிழகத்தில் உள்ள ஒரு நியமன எம்.எல்.ஏ. என யாருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.

இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி இப்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பதுங்கும் வேலையை செய்கிறார். வழக்கிற்கு செல்லும்போது அவர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினாரா? அரசுக்கும், முதல்–அமைச்சருக்கும் பின்னடைவு ஏற்படும்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது நியாயமற்ற செயல்.

கண்துடைப்பு நாடகத்துக்காக கூட்டப்படும் இந்த கூட்டத்தினை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது. புதுவையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை அளிக்க கவர்னர் மறுக்கிறார். அதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை.

ஏனாமில் 6 மாதத்துக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கான நிவாரண நிதி இன்னும் தரப்படவில்லை. இப்போதும் ஏனாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்கவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியிடம் கேட்டபோது, அவரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கலந்துகொள்ளாது என்று தெரிவித்தார்.

புதுவை சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story