வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 Dec 2018 1:55 AM IST (Updated: 19 Dec 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம்,

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் இந்த விழா சிறப்பாக நடைபெறும். சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற ‘கோட்டை பெருமாள்’ என்றழைக்கப்படும் அழகிரிநாத சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் ‘பரமபத வாசல்’ என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.

சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர்,விஷ்ணு துர்க்கை சன்னதிகளில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். மேலும் பெருமாளை தரிசிப்பதற்காக அதிகாலை முதல் இரவு வரையிலும் சேலம் மாநகர் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் ‘ராப்பத்து’ உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், பக்தி உலாவுதல் உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.

கோட்டை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் அருகே கரும்பு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கரும்பு விற்பனை அமோகமாக நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், வீடுகளுக்கு திரும்பி செல்லும்போது ஆர்வத்துடன் கரும்புகளை வாங்கி சென்றார்கள்.

Next Story