பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தடை நீட்டிப்புவியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தடை நீட்டிப்புவியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:30 AM IST (Updated: 19 Dec 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மாட்டு சந்தைக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் நேற்று சந்தைக்கு வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோமாரி நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சியில் 2 வார காலத்திற்கு மாட்டு சந்தை நடத்த தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நிலையில் 2 வாரகால தடை நேற்றுடன் முடிவடைந்தது.

மேலும் செவ்வாய்க்கிழமை என்பதால் சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் மாடுகள் மற்றும் வியாபாரிகளால் களைகட்டியது. இதற்கிடையில் சந்தைக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் இந்த மாதம் முழுவதும் மாட்டு சந்தை நடத்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே சந்தையை நடத்த கூடாது என்றனர். இதனால் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்களும், வாங்க வந்த வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-

மாட்டு சந்தை நடத்த 2 வார காலம் தடை விதிக்கப்பட்டது. இன்று (நேற்று) தடை காலம் முடிந்து சந்தைக்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தை நடக்கும் என்பது குறித்த தகவல் வெளியூர் வியாபாரிகளுக்கு தெரியாது. இதனால் உள்ளூர் பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 25 வியாபாரிகள் வந்தனர். 500 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக சந்தைக்கு திங்கட்கிழமை மாலை முதல் மாடுகள் கொண்டு வரப்படும்.

செவ்வாய்க்கிழமை மாலை வரை சந்தை நடைபெறும். சந்தை நடந்து கொண்டிருக்கும் போது, நகராட்சி அதிகாரிகள் வந்து சந்தையை நடத்த இந்த மாதம் வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றனர். இதனால் சந்தையில் 200 மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மீதமுள்ள 300 மாடுகளை திரும்ப அழைத்து சென்றனர்.

சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அதிகாரிகளின் தடை உத்தரவு காரணமாக சந்தை 4 மணி நேரம் மட்டுமே நடந்தது. இதனால் மாடுகளை விற்பனை செய்ய வந்தவர்களும், வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மாடுகளும் குறைந்த விலைக்கு விலை போனது.

காங்கயம் காளை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், பசு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரமும், நாட்டு எருமை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரமும், மொரா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரமும், செர்சி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோமாரி நோய் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் உத்தரவின் பேரில் 2 வார காலம் மாட்டு சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) மதியம் தான் தடையை நீட்டித்து உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. இந்த மாதம் முழுவதும் மாட்டு சந்தையை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் சந்தை நடத்த அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story