புவிவெப்பமயமாதலை தடுக்க பிரதமர்-ஐ.நா. பொதுச்செயலாளருக்கு மாணவி கடிதம்


புவிவெப்பமயமாதலை தடுக்க பிரதமர்-ஐ.நா. பொதுச்செயலாளருக்கு மாணவி கடிதம்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

புவிவெப்பமயமாதலை தடுக்க விமானம் மூலம் விதைப்பந்துகளை தூவக்கோரி பிரதமர் மற்றும் ஐ.நா.பொதுசெயலாளருக்கு கரூர் மாணவி கடிதம் அனுப்பினார்.

கரூர்,

கரூர் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன்-சங்கீதா தம்பதியின் மகள் ரக்‌ஷனா (வயது 12). இவர், கரூர் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெண்ணெய்மலை பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பறவைகள் வேட்டையாடுதலை தடுக்க வேண்டும், உலகம் முழுவதும் வேம்பு, புங்கன் உள்ளிட்ட 2,400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு நாள் முழுவதும் ரக்‌ஷனா தொடர் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ஐ.நா.பொது செயலாளர் அன்டானியா குட்டர்ஸ் ஆகியோருக்கு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

தகவல் தொகுப்புகளுடன் கடிதம்

இந்த நிலையில் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக அந்த 2 கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள், கடந்த 2011-18-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தாம் மேற்கொண்ட சுற்றுப்புறசூழல் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள், மேலும் வருங்காலத்தில் புவிவெப்பமயமாதலால் பனிப்பொழிவு, பூகம்பம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல் தொகுப்புகளை மரப்பெட்டியில் வைத்து அடைத்து வைத்து, அதனை பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.பொது செயலாளர் அன்டானியா குட்டர்ஸ் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதத்துடன் சேர்த்து மாணவி ரக்‌ஷனா நேற்று மாலை தபாலில் அனுப்பினார். கரூர் தலைமை தபால் நிலையத்தில் அந்த தபால்களை அனுப்ப ரூ.20 ஆயிரம் வரை செலவானது குறிப்பிடத்தக்கது. 

Next Story