வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்


வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:15 AM IST (Updated: 19 Dec 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளிக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கல்விச்சீரை பெற்றோர்கள் கொண்டு வந்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர் களின் பெற்றோர்கள், நன் கொடையாளர்கள் இணைந்து பள்ளிக்கு சீர்வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்ட், கணினி, ஜெராக்ஸ் மிசின், பிரிண்டர், டேபிள் சேர்கள், மின்விசிறிகள், குடங்கள், வாளிகள், துடைப்பங்கள் சுவர்கடிகாரம் ஆகிய பொருட்களை வாங்கினர். இதையடுத்து அனைத்து பொருட்களையும் மேள வாத்தியம் முழங்க வெள்ளியணை பெருமாள் கோவிலிருந்து ஊர்வலமாக கடைவீதி வழியாக அரசு தொடக்கப்பள்ளிக்கு எடுத்து வந்தனர். இதை யடுத்து கல்விச்சீர் எடுத்து வந்தவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி

தொடர்ந்து பள்ளியில் கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி கனகராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் வரவேற்று பேசினார். மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆரோக்கியராஜ், கரூர் ஜவுளி பூங்கா தலைவர் நாச்சிமுத்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அதிகாரி ரவிச்சந்திரன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். இதையடுத்து பெற்றோர் மற்றும் நன்கொடையாளர்கள் தாங்கள் கொண்டு வந்த கல்விச்சீர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சூரியபிரகாஷிடம் வழங்கினர்.

செய்தித்தாள்

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சூரியபிரகாஷ் பேசுகையில், “இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு பொருட் களை சீராக வழங்கியவர்களை பாராட்டுகிறேன். மேலும் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க நல்லதை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். உலக நடப்புகளை அறிந்து, அறிவை வளர்த்துக்கொள்ள குழந்தைகள் தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். ஸ்மார்ட் போனை பயன்படுத்திக்கொண்டு, தனிமையில் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழவும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கல்வித்துறை அதிகாரிகள், நன்கொடையாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினர். 

Next Story