தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

இந்தியா முழுவதும் 123 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இந்த நிலையில் திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய அரசின் இந்த போக்கை கண்டிக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ச்சியாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, திருச்சி விமான நிலையம் முன்பு விமான நிலைய ஆணைய ஊழியர் சங்கத்தினர், அதன் செயலாளர் யுவராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர். போராட்டத்தின்போது விமான நிலைய ஆணைய ஊழியர் சங்க செயலாளர் யுவராஜேஷ் கூறியதாவது:-

இந்தியாவில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அரசின் செயலை கண்டிக்கிறோம். தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என 2 கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 21-ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அதன் பிறகும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால், வருகிற 28-ந் தேதி ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story