தி.மு.க.வினர் வதந்தி பரப்புகின்றனர்: ‘அ.ம.மு.க.வை விட்டு நான் விலக மாட்டேன்’ - தங்கதமிழ்செல்வன் பேட்டி
‘தி.மு.க.வினர் வதந்தி பரப்புகின்றனர் என்றும், அ.ம.மு.க.வை விட்டு நான் விலக மாட்டேன்‘ என்றும் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்கதமிழ்செல்வன். இவர், அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையப்போவதாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக அவர், தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் அவர், அ.தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இதனால் அ.ம.மு.க.வினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தனது பதிலை, டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், தி.மு.க.வில் நான் சேர விரும்புவதாக தி.மு.க. தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வழியிலேயே எனது பயணத்தை தொடருவேன். துரோகத்தை வீழ்த்த எதிரியை வென்று கழகத்தையும், தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என்று பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து தங்கதமிழ்செல்வனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘நான் அ.ம.மு.க.வை விட்டு செல்லும் எண்ணம் என்னிடம் எப்போதும் இல்லை. தொடர்ந்து அ.ம.மு. க.வில் தான் நான் நீடிப்பேன். தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் இருப்பவர்கள் அவர்கள் கட்சியை சார்ந்த தகவல்களை பரப்புவதை விட்டு, விட்டு, மாற்று அணியில் உள்ள என்னைப் பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் கட்சி வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. என்னை பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். இதனை யாரும் நம்ப வேண்டாம்’ என்றார்.
Related Tags :
Next Story