10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை 1-1-2016 முதல் முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதிய பலன்கள் 1-1-2016 முதல் வழங்க வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு ஊதியப்படி உயர்வு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் 30 நாட்கள் ஊதியத்தோடு கூடிய விடுப்பும், அதை 180 நாட்கள் வரை சேமித்து பணமாக்கி கொள்ளும் வசதியும், ஜி.டி.எஸ். ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கல்வி நிதியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதையொட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கோட்ட செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் இஸ்மாயில், பொருளாளர் தெய்வ செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கிராமிய அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா சேவை, அஞ்சல் காப்பீட்டுத் திட்ட சேவை முழுமையாக பாதிக்கப்பட்டன. பல கிராமங்களில் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டு இருந்தன.

இதுகுறித்து கோட்ட செயலாளர் சுபாஷ் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மொத்தம் 187 கிராமிய தபால் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்ட கிராமிய தபால் நிலையங்கள் எங்களது போராட்டத்தின் காரணமாக பூட்டப்பட்டன. மொத்தம் 546 கிராம தபால் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 400 பேர் நேற்றைய போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா, வங்கி சேவை, காப்பீட்டு சேவை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story