கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் சாதி, வருமானம், இருப்பிடம், பட்டா உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கும் முறையை அரசு நடைமுறைப்படுத்தியது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, இணையதள சேவை ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வேலையை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களை கல்வி தகுதி அடிப்படையில் இரண்டாக பிரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் அஞ்சலி ரவுண்டானா அருகே திரண்டனர். பின்னர் அதன் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமையில் பேரணியாக, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், கிராம நிர்வாக அலுவலர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றனர். நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 235 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். வரும் நாட்களில் திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களை ஒருங்கிணைத்து, திண்டுக்கல்லில் போராட்டம் நடத்த உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வருவாய் ஆய்வாளர்களுக்கு கூடுதல் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணிகளை தாங்கள் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நேரடி நியமன உதவியாளர்கள் சங்கம் ஆகியவை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சான்றிதழ்கள் வழங்கும் பணி முற்றிலும் முடங்கி உள்ளது.
Related Tags :
Next Story