ரெயில் மறியல் போராட்டம் தொடர்பான வழக்கு: திருவண்ணாமலை கோர்ட்டில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆஜர்


ரெயில் மறியல் போராட்டம் தொடர்பான வழக்கு: திருவண்ணாமலை கோர்ட்டில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆஜர்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:15 PM GMT (Updated: 18 Dec 2018 10:13 PM GMT)

ரெயில் மறியல் போராட்டம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டில் நேற்று எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஆஜரானார்.

திருவண்ணாமலை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் தி.மு.க. சார்பில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்த திருப்பதி- விழுப்புரம் பயணிகள் ரெயில் காலை 8.30 மணிக்கு வந்து 9 மணிக்கு புறப்பட வேண்டும். இந்த மறியல் போராட்டத்தின் காரணத்தினால் 9.04 மணிக்கு, அதாவது 4 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே கார்டு ஆர்.பாலசுப்பிரமணி என்பவர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று காலை திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2-ல் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட 13 பேரும் நேரில் ஆஜர் ஆகினர். முன்னதாக கோர்ட்டிற்கு எ.வ.வேலு எம்.எல்.ஏ. ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். கோர்ட்டில் எ.வ.வேலு எம்.எல்.ஏ.விடம் மாஜிஸ்திரேட்டு சில கேள்விகள் கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த எ.வ.வேலு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நடுவர்மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று கூறியது. சுப்ரீம் கோர்ட்டு அதனை உறுதி செய்தது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் தான் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தினோம். 8.30 மணிக்கு வந்த ரெயில் 9 மணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டது. அந்த சமயத்தில் எந்தவித காலதாமதமும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும், ரெயில் பயணிகளுக்கும் எவ்வித இடையூறும் செய்யவில்லை. போலீசார் எங்கள் மீது பொய்யான ஒரு வழக்கை போட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story