நீரா பானம் விற்பனைக்கான கடும் நிபந்தனைகளை நீக்க வேண்டும் - வேலூரில் நல்லசாமி பேட்டி


நீரா பானம் விற்பனைக்கான கடும் நிபந்தனைகளை நீக்க வேண்டும் - வேலூரில் நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2018 11:15 PM GMT (Updated: 18 Dec 2018 10:44 PM GMT)

‘நீரா பானம் விற்பனைக்கான அரசின் கடுமையான நிபந்தனைகளை நீக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு ‘கள்’ இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

வேலூர்,

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அதன் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கோவையில் இருந்து சென்னைக்கு பரப்புரை பயணம் தொடங்கினர். அவர்கள் நேற்று வேலூருக்கு வந்தனர். வேலூர் கோட்டைபகுதியில் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக கள் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நீரா பானம் விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு ஆண்டாகியும் 4 நிறுவனங்கள் மட்டுமே நீரா பானம் விற்பனை செய்கிறது. காரணம் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை அகற்றினால் மட்டுமே நீரா பானம் விற்பனை சாத்தியமாகும்.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு பனை தொழிலாளர்கள் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியம் புதுப்பிக்கப்படவில்லை. மீண்டும் புதுப்பிக்க வேண்டும். 20 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் மூடப்பட்டுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை திறக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (இன்று) முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். ஏற்கனவே அவரை சேலத்தில் சந்தித்தபோது நல்ல முடிவு அறிவிப்பதாக கூறினார். அதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கள் விற்பதால் கிராமத்தின் பொருளாதாரம் உயரும். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை நியாயமானதுதான் என யார் நிரூபித்தாலும் ரூ.10 கோடி பரிசு தருவதாக தமிழ்நாடு கள் இயக்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் பரிசு பெறுவதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை. இப்போதுகூட வரலாம். கள் தடைசெய்யவேண்டிய போதை பொருள்தான் என்று நிரூபித்தால் எங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொள்கிறோம். கள் இயக்கத்தையே கலைத்துவிடுகிறோம்.

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து ராணுவத்தைக்கொண்டு மீட்பு பணிசெய்திருந்தால் இந்நேரம் இயல்புநிலை திரும்பியிருக்கும். தற்போது 7 மாவட்ட மக்களின் வாழ்க்கை 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. மத்திய அரசு இப்போதாவது தேசிய பேரிடராக அறிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கள் இறக்குவதற்கான தடையை கண்டித்தும், தடையை நீக்கக்கோரியும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் உடன் வந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீரா பானம் வழங்கப்பட்டது.

பேட்டியின் போது மாநில அமைப்பாளர்கள் கதிரேசன், முத்துரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story