விழுப்புரத்தில் குறைகேட்பு கூட்டம்: கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் குமாரவேல் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்துள பேசியதாவது:-
அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை கண்டக்டர்கள் வாங்குவதில்லை. அதனை வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இருக்கும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. அதனை பொதுப்பணித்துறையினர் உடனே அகற்ற வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எந்த கூட்டத்திற்கும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வருவதில்லை. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்கிறார்கள். தற்போது எள் விளைச்சல் செய்ய உகந்த காலம் என்பதால் நல்ல ரகங்களை வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
முண்டியம்பாக்கம், ஆரியூரில் உள்ள சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை இன்னும் வழங்காமல் உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் குமாரவேல், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் தாசில்தார்கள் சையத்மெகமூத், சுந்தர்ராஜன், மண்டல துணை தாசில்தார்கள் வெங்கட்ராஜ், முருகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story