வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 5:00 AM IST (Updated: 19 Dec 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர்,

வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வேலூர் வேலப்பாடியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு சாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக உற்சவர் வரதராஜபெருமாள் எழுந்தருளி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேசபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் அண்ணாசாலையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

மெயின் பஜாரில் உள்ள பெருமாள் கோவில், அரசமரப்பேட்டை லட்சுமி நாராயணபெருமாள் கோவில், கலாஸ்பாளையம் கோதண்டராமசாமி கோவில், தொரப்பாடி வெங்கடரமணசாமி கோவில், விருப்பாட்சிபுரம் பெருமாள் கோவில் உள்பட அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலை மீதுள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் நேற்று சிறப்புப் பூஜைகள் நடந்தது. காலை 4 மணிக்கு மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் சுந்தரராஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கணியம்பாடி ஒன்றியம், சிங்கிரிகோவில் கிராமத்தில் நாகநதி வடகரையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்மர் நாகாபரணத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story