காம்கார் ஆஸ்பத்திரியில் தீ விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு 25 பேர் கவலைக்கிடம்
மும்பை காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. கவலைக்கிடமான 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
மும்பை காம்கார் ஆஸ்பத்திரி தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. கவலைக்கிடமான 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் தீ விபத்து
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான காம்கார் என்று அழைக்கப்படும் தொழிலாளர் நல மருத்துவமனை (இ.எஸ்.ஐ.) உள்ளது. 1970-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 325 படுக்கை வசதிகளுடன் 5 மாடிகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பார்வையாளர்கள் நேரத்தின் போது, நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.
அப்போது ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவி தீ கொழுந்து விட்டு எரிந்ததால் 4 மற்றும் 5-வது மாடிகளில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் என ஏராளமானோர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
4 மணி நேரம் போராடி தீ அணைப்பு
புகையால் நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். பிரசவித்த தாய்மார்களும் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.
சுதாரித்து கொண்டு அவர்கள் பிறந்த தங்கள் குழந்தைகளை துணியில் சுற்றி தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். தீயணைப்பு படையினர் 12 வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.
தீக்காயங்களுடன் மீட்பு
தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக தீ எரிந்து கொண்டிருக்கும் போதே ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலர் தீக்காயங்களுடனும், புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையிலும் காணப்பட்டனர். மீட்பு பணியின் போது தீயணைப்பு படையினர் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், இந்த கோர தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்வு
இந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்த தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது. இதில் 6 மாத பெண் குழந்தையும் அடங்கும்.
இதற்கிடையே மொத்தம் 176 பேர் காயத்துடன் மீட்கப்பட்டதாக நேற்று மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்தது. அவர்கள் கூப்பர், பால்தாக்கரே நினைவு ஆஸ்பத்திரி உள்பட நகரின் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 26 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளனர்.
காரணம் என்ன?
இந்தநிலையில், காம்கார் ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்து உள்ளது. 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் தீ விபத்து பாதுகாப்பில் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாநகராட்சியின் தீயணைப்புத்துறை தெரிவித்து உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி உத்தரவு
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா ஆகியோரிடம் பேசியதாகவும் கூறினார்.
மேலும் தீ விபத்து தொடர்பாக உண்மையை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்-மந்திரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story