சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள்
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
மும்பை,
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் சிலருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதி கிடைத்துள்ளது
இதை குறிப்பிட்டு, மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
“1984-ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது நீதி கிடைத்திருக்கிறது” என்று மோடி தெரிவித்தார்.
ரபேல் விவகாரம்
மேலும் ரபேல் விமான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசிய அவர், “நாட்டின் உச்ச நீதிமன்றம் ரபேல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. ஆனால் கோர்ட்டின் தீர்ப்பு மூலமாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் வெளிப்படைதன்மையும், நேர்மையும் உறுதியாகி உள்ளது. அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறும்போது எது தவறானது, எது உண்மை என்பது புரியாது. இந்த உளவியலை எதிர்க்கட்சிகள் கையாளுகின்றன” என்றார்.
ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவில் இருப்பார் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Related Tags :
Next Story