பாலக்கோடு ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தல்


பாலக்கோடு ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:00 AM IST (Updated: 19 Dec 2018 7:53 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் எர்ரண அள்ளி ஊராட்சிக்குட்பட்ட குப்பன் கொட்டாய் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. இந்த நிலையில் குடிநீர் வினியோகம் சரியாக கிடைக்காத பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் அங்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:– எங்கள் பகுதியில் 3 சமுதாயங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அதிக அளவில் குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கான தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே மிகக்குறைந்த அளவில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

பாரபட்சமான முறையில் தண்ணீர் வினியோகிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட டேங்க் ஆபரேட்டரை கேட்டால் முறையாக பதிலளிக்காமல் தரக்குறைவாக பேசுகிறார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். கிராம மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறை வைத்து தண்ணீர் வினியோகிக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய கண்காணிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம் இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் ஆபரேட்டரை அழைத்து விசாரித்தார். இனிமேல் இதுபோன்ற புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முறை வைத்து போதுமான அளவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story