வாக்காளர் பட்டியலில் 46 ஆயிரம் பேர் நீக்கம்: அதிகாரிகளிடம் காரணம் கேட்டறிந்த பார்வையாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்


வாக்காளர் பட்டியலில் 46 ஆயிரம் பேர் நீக்கம்: அதிகாரிகளிடம் காரணம் கேட்டறிந்த பார்வையாளர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 8:11 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் கே.மிஸ்ரா, அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தார். மேலும் அவர் வீடு, வீடாகவும் சென்று ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் கே.மிஸ்ரா நேற்று வேலூர் அலமேலுரங்காபுரத்தில் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? இறந்தவர்கள் மற்றும் இரண்டு முறை பெயர் பதிவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் மெகராஜ், இளம்பகவத், பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சந்தோஷ் கே.மிஸ்ரா கலந்துகொண்டு வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் குறித்து வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு 46 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளிடத்தில் கேட்டார். அதற்கு இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு அடிப்படையில் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story