தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த யானைகள்


தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த யானைகள்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 5:48 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று 70-க்கும் மேற்பட்ட யானைகள் சாமநஞ்சபாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அவைகள் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்தன.

யானைகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரைந்து விரட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story