உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு
உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்காக அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை சென்றனர். அப்போது கரையோரம் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிலை ஒன்று கிடந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, துணை தாசில்தார் சுருளி மற்றும் வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர். பின்னர் மஞ்சள் துணியை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 10 கிலோ எடை கொண்ட வெண்கலத்தினால் ஆன அம்மன் சிலை இருந்தது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் முல்லைப்பெரியாற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அந்த சிலையை பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதனையடுத்து அந்த சிலையை வருவாய்த்துறையினர், தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் கேட்டபோது, முல்லைப்பெரியாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பழமை வாய்ந்ததாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை எந்த ஆண்டை சேர்ந்தது என்பது குறித்து தொல்லியல் துறையினர் தான் ஆய்வு செய்வார்கள். மேலும் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story