தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 19 Dec 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கருப்புக்கொடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி நேற்று பண்டாரம்பட்டி, தூத்துக்குடி புதுத்தெரு, பெரியநாயகிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆங்காங்கே வீடுகளில் மக்கள் கருப்புக்கொடி ஏற்றினர். சில இடங்களில் கருப்புக்கொடி ஏற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சில வீடுகளில் மக்கள் தங்கள் அணியும் கருப்பு நிற ஆடையை தொங்க விட்டு இருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி கருப்புக்கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாலன், மகளிர் அணி செயலாளர் அந்தோணி கிரேஸ், இணை செயலாளர் விஜயலட்சுமி பொன்ராஜ், மாவட்ட பொருளாளர் பிரைட்டர், கிழக்கு பகுதி செயலாளர் எட்வின்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story