ஓசூரில் பரபரப்பு: ஆசிரியை வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் ஆசிரியை வீட்டில் 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சென்னத்தூர் அருகேயுள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார்(வயது 43). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா(37). ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசோக்குமார் சொந்த வேலையாக ஈரோடு சென்றார். மனைவியும், மகன் அபிஜித்தும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் 2 பேர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.
அவர்களது சத்தம் கேட்டு, தூங்கிக்கொண்டிருந்த கவிதா எழுந்து, ஊரிலிருந்து கணவர் வந்து விட்டதாக நினைத்து, வெளியே வந்தார். அப்போது அந்த மர்ம ஆசாமிகள் கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் பறித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து அந்த ஆசாமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினர். இதே போல அப்பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளில் மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் விழித்து கொண்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கவிதாவின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 கொள்ளையர்களும் வீட்டில் நுழைவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியை கவிதாவின் வீட்டில் மொத்தம் 31 பவுன் நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஓசூர் நேரு நகர் பகுதியில், அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story