சின்னம்பள்ளியில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு


சின்னம்பள்ளியில் 5 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Dec 2018 3:45 AM IST (Updated: 20 Dec 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

சின்னம்பள்ளியில் 5 வீடுகளில் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த சிலர் வேலைக்காக வீடுகளை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊருக்குள் மர்மநபர்கள் நுழைந்தனர். இந்த ஊரில் உள்ள குமார், சந்திரன், பொன்னுத்தாயி, கோவிந்தன், ஜெயா ஆகியோரின் வீடுகளில் பூட்டையும், கதவையும் உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

நேற்று காலை அக்கம்பக்கத்து வீட்டினர் பார்த்தபோது மேற்கண்ட 5 பேருடைய வீடுகளின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி திருட்டு நடைபெற்ற வீடுகளை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் தடயவியல் நிபுணர்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. 5 வீடுகளில் 13 பவுன் நகைகள், பணம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. ஒரே ஊரில் 5 வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story