தொப்பம்பட்டியில் பரபரப்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கீரனூர்,
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் ஊராட்சி ஈசக்காம்பட்டியில் ஆயிரக் கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்கள் நேற்று காலிக் குடங்களுடன் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு கடந்த 35 நாட்களுக்கு மேல் குடிநீர் வழங்கப்படவில்லை. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை.
எனவே எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நாகராஜன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 6 மாதங்களாக எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. அதுகுறித்து உங்களிடம் புகார் தெரிவித்த போது, 5 வீடுகளுக்கு ஒரு குழாய் என்ற அடிப்படையில் எங்கள் பகுதியில் பொதுக்குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுத்தீர்கள். ஆனால் தற்போது அவற்றில் தண்ணீர் வருவதில்லை. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கடந்த 35 நாட்களுக்கும் மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் தான், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றனர்.
இதையடுத்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாதது குறித்த தகவல் என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. தற்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டாரை வேறு கிணற்றில் பொருத்தி தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story