பூம்புகாரில், கடலில் குளித்தபோது அலையில் சிக்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி


பூம்புகாரில், கடலில் குளித்தபோது அலையில் சிக்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 20 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவரது மகள் விவேகா(வயது 18). அதே ஊரைச் சேர்ந்த உலகநாதன் மகள் மஞ்சு(18), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு வடக்கு சின்னியநத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகள் சிவபிரியா(17). இவர்கள் 3 பேரும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரி பருவத்தேர்வு விடுமுறை என்பதால் இவர்கள் 3 பேரும், சக மாணவிகளுடன் சேர்ந்து பூம்புகார் கடற்கரைக்கு சென்றனர்.

கடலை பார்த்ததும் மாணவிகள் சிலருக்கு குளிக்கும் ஆசை ஏற்பட்டது. இதனையடுத்து மாணவிகள், காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறைக்கு சென்று கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்தது. இந்த அலையில் சிக்கி மாணவிகள் விவேகா, மஞ்சு, சிவபிரியா ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பகுதியில் 3 பேரும் பிணமாக கரை ஒதுங்கினர்.

மேலும் சக மாணவிகளான அசினாபானு, சங்கீதா ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வினிதா, அன்னலட்சுமி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வேலுதேவி, கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற அவர்கள், கடலில் மூழ்கி இறந்த விவேகா, மஞ்சு, சிவபிரியா ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகள் இறந்த செய்தியை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாணவிகள் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

கடற்கரை பகுதியில் அங்காங்கே கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் வைத்தும், அதனை பொருட்படுத்தாமல் இதேபோல் கடலில் இறங்கி குளித்து பலரும் உயிரை மாய்த்து கொள்கின்றனர் என்று அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story