தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று காலை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று காலை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கோரிக்கை மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள், ஒப்பந்த பணியாளர்கள், விவசாய சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
வாழ்வாதாரம்
எங்கள் வாழ்வாதாரம் ஸ்டெர்லைட் ஆலையை நம்பிதான் இருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து பலரும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேலை இழந்து வேறு வேலை கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் எங்கள் துன்பம் நீங்கும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் ஆலையை திறக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கஷ்டம் நீங்கும் என்று நினைத்த போது, ஆலையை திறக்காமல் காலம் தாழ்த்துவது எங்கள் கஷ்டத்தை மேலும் அதிகரிக்கிறது.
ஆலையை திறக்க வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் இந்தியா தாமிர உற்பத்தியில் முதல் இடம் வகித்து வந்தது. இதனால் சீனா போன்ற கம்யூனிச நாடுகளின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் மக்களை மூளை சலவை செய்து தூத்துக்குடி மாநகரை போர்க்களமாக மாற்றி ஆலையை மூடச் செய்தனர். தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை ஆய்வு செய்து, 3 வாரத்துக்குள் ஆலையை திறக்க வழிவகை செய்யுமாறு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்டு உள்ள சுமார் 30 ஆயிரம் குடும்பத்தினரின் வறுமையை போக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story