மத்திய அரசின் நலத்திட்டங்களை பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய அரசின் நலத்திட்டங்களை பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என, காணொலி காட்சி மூலம் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி கூறினார்.
வேலூர்,
வேலூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அரியூர் நாராயணி மகாலில் நேற்று நடந்தது. இதில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ‘என் வாக்குச்சாவடி, வலுவான வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சி மத்திய அரசில் பொறுப்பேற்று பொதுமக்களின் நலனுக்காக இதுவரை ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அந்த நலத்திட்டங்கள் குறித்து நமது கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். வேலூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவு இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக வேலூர் மாவட்ட இளைஞர்களை பாராட்டுகிறேன்.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகத்துக்கு மாறாக செயல்பட்டு வருகின்றனர். அதனை முறியடிக்கும் வகையில் நமது கட்சியினர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ‘முத்ரா’ திட்டத்தின் மூலம் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தியதுடன், ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய பள்ளிகொண்டாவைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
கூட்டத்தில், ஊடக கோட்ட பொறுப்பாளர் சரவணகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாஸ்கர் வாசு, மாவட்ட செயலாளர் எஸ்.எல்.பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story