ஆலங்குளம் அருகே மாமா ஓட்டிய டிராக்டர் மோதி 3 வயது குழந்தை பரிதாப சாவு
ஆலங்குளம் அருகே மாமா ஓட்டி வந்த டிராக்டர் மோதி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மாமா ஓட்டி வந்த டிராக்டர் மோதி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
3 வயது குழந்தை
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜன், கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி முருகேஸ்வரி. இவர்களுடைய மகள் வினிதா (வயது 3). இவள் வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். தினமும் வினிதா வீட்டில் இருந்து அங்கன்வாடிக்கு தனியாக சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவாள்.
இந்தநிலையில் நேற்று காலையில் வினிதா வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சென்றாள். ஆனால் அங்கன்வாடி மையம் பூட்டப்பட்டு இருந்ததால், அங்கு வந்த மற்ற குழந்தைகளுடன் வினிதா அம்மன் கோவில் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள்.
டிராக்டர் மோதி பலி
அந்த சமயத்தில் முருகேஸ்வரின் சித்தப்பா மகன் ராஜ்குமார் (28) அங்கன்வாடியின் அருகே நிறுத்தி வைத்து இருந்த தனது டிராக்டரை எடுக்க வந்தார். அவர் டிராக்டரை பின்நோக்கி இயக்கிக் கொண்டு இருந்தார். ராஜ்குமாரை பார்த்த வினிதா மாமா என்று சத்தம் போட்டுக் கொண்டு அவரை நோக்கி ஓடினாள்.
அப்போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதி கீழே விழுந்த வினிதா மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதை பார்த்த ராஜ்குமார் டிராக்டரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வினிதாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தையின் பெற்றோர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தங்களது குழந்தையை பிணக்கோலத்தில் பார்த்து கதறி துடித்தனர். இது அங்கு இருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாபம்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே மாமா ஓட்டிய டிராக்டர் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story